Saturday, July 28, 2012

கண்களைக் காக்கும் பொன்னாங்கண்ணி




கீரைகள் அனைத்தும் நமக்கு கற்பகத் தருவாக விளங்குகின்றன.

தினமும் உணவில் கீரையை சேர்த்து வந்தால் நோயில்லா பெரு வாழ்வு வாழலாம் என்று ஆன்றோர்களும் சான்றோர்களும் கூறியுள்ளனர்.

எளிய விலையில் கிடைத்த கீரைகளை கௌரவம் பார்த்து வாங்கி சாப்பிடாமல் விட்டவர்கள் இன்று கீரைகளைத் தேடி கடைகளில் அலைகின்றனர்.

கீரைகளைத் தவிர்த்து மேற்கத்திய உணவுகளை நாடுபவர்களின் இன்றைய நிலை, ஒருபுறம் நீரிழிவு, மறுபுறம் இரத்த அழுத்தம் என பலவாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை ஏற்படக் காரணம் அவர்களின் அறியாமையே...

கீரைகளின் பயன்களை சித்தர்கள் பல நூல்களில் எழுதியுள்ளனர். உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கோட்பாட்டின் கீழ் தினமும் உணவில் சேர்க்க வேண்டிய கீரைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகின்றோம். 

இந்த 
 பொன்னாங்கண்ணி கீரையை பொன்+ஆம்+ காண்+நீ என சித்தர்கள் கூறியுள்ளனர். உடலை தங்கம் போல் பொலிவாக்க இதுவே சிறந்த கீரையாகும்.

இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.

சீமை பொன்னாங்கண்ணிதான் சிவப்பு பொன்னாங் கண்ணி என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் தோட்டத்தில் இதை வளர்க்கலாம். பூந்தொட்டியில் கூட வளர்க்கலாம். 

Tamil : Ponnankanni

English : Alternanthera

Telugu : Ponnanganti kura

Sanskrit : Giogihra

Malayalam : Ponnankanni

Botanical Name : Alternanthera Sessilis (Amaran theceae)


இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, தேகத்தை தங்க நிறமாக்கும் தங்கச்சத்து ஆகிய சத்துக்கள் நிரம்ப உள்ளன. வைட்டமின் சி அடங்கியுள்ளது.

இரத்தத்தை சுத்தப்படுத்த

இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது. 

பொன்னாங்கண்ணிக் கிரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

பித்தத்தைக் குறைக்க

பித்த மாறுபாட்டால் உடலில் பல நோய்கள் தாக்குகின்றன. தலைவலி மஞ்சள் காமாலை, ஈரல் பாதிப்பு, கண் பார்வைக் கோளாறு உருவாகிறது. இதற்கு சிவப்பு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகும். இந்த கீரையுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சூப் செய்து உணவுக்குப் பின் அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

கண்பார்வைக் கோளாறுகள் நீங்க

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும் .

இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். 

ஞாபக மறதி குணமாக

சிலர் ஞாபக மறதி காரணமாக நிறைய இழப்பை சந்தித்திருப்பார்கள். ஞாபக மறதியை மனிதனை அழிக்கும் கொடிய வியாதிக்கு ஒப்பிடலாம். இவை நீங்கி நினைவாற்றல் அதிகரிக்க பொன்னாங்கண்ணி சூப் சிறந்த மருந்தாகும்.

மூல நோய் குணமாக

குடலில் அலர்ஜி உண்டாகி அவை மூலத்தை தாக்கி மூலநோய் ஏற்படும். இதற்கு சிலர் அறுவை சிகிச்சை கூட செய்துகொள்வார்கள். இந்த நிலை மாற பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.

தோல் வியாதிகள் குணமாக

சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகிறது.

பொன்னாங்கண்ணி தைலம்

கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்துக் குளித்து வந்தால் நல்லது. இதை வீட்டிலேயே தயாரிக்கலாம். 

பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது - 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது - 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும்.

இவ்வளவு பயன்கள் உள்ள இந்தக் கீரையை இனிமேலும் ஒதுக்காமல் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.


No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...