Wednesday, February 26, 2014

மரபணு மாற்றப்பட்ட உணவுகள் - மனித குலம் தப்பிக்குமா?

மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் மனிதன் தன்னையும், தன்னை சார்ந்து வாழும் மற்ற உயிரினங்களையும் அழிக்கப்போகிறான்..........?

 



மரபணுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரித்த உணவுப்பொருள்கள்-காய்கறிகள், கீரைகள், கிழங்குகள் முதலியன நம்நாட்டில் எவ்வித எதிர்ப்புமின்றி நுழைந்துவிட்டன. இவற்றைக் கேள்வி கேட்க ஆளில்லை.

நாம் தினந்தோறும் வேலையுடனும், பசியுடனும், உழைப்புடனும், ஊழல்போன்ற மோசமான சமூக நிலைகளுடனுமே போராடிக்கொண்டிருக்கும்போது இதில் எப்படிக் கவனம் செலுத்தமுடிகிறது? மேலும் உணவுப்பொருள்களின் விலைகளும் ஏறிக்கொண்டே செல்கின்றன.

மரபணுத் தொழில் நுட்பக் குழுமங்கள் செயற்கை உணவுப்பொருள்களைத் தயாரித்து நம்மிடையில் சந்தடியில்லாமல் விடுகின்றன. இவற்றால் அதிக பாதிப்புகள் நிகழலாம். இவற்றை நாம் கேள்வி கேட்டுத்தான் ஆகவேண்டும்.

உதாரணமாகக் காலங்காலமாகப் பழங்கள் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் இப்போது மரபணு மாற்றத்தால் உருவான ஆப்பிள்கள், பப்பாளிகள், மாதுளைகள் போன்றவை தான் கிடைக்கின்றன. (சிலசமயம், இயற்கைப் பழங்களோடும் சேர்த்து, இரண்டு வகையான பழங்கள் கடைகளில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.) சென்னை, பெங்களூர் முதலாகச் சிறுநகரங்கள் வரை ரிலையன்ஸ், மோர் போன்ற பெருங்குழுமங்கள் நடத்தும் கடைகளில் இப்படிச் செயற்கையாகத் தயாரான பழங்கள் மட்டுமே கிடைக்கின்றன. உங்களுக்கு எப்படித்  தெரியும் என்று நீங்கள் கேட்கலாம்.

வழக்கமாக நாம் பப்பாளிப்பழம் சாப்பிடுவோம். அதில் கரிய நிறமுள்ள விதைகள் மிகுதியாக உள்ளே இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் சிலகாலமாக நாம் வாங்கி உண்ணும் பப்பாளிகளில் விதைகளே இருப்பதில்லை. வெறுமையாக இருக்கும் உட்கூடு. விசாரித்த பிறகுதான் தெரிகின்றது – இது செயற்கைப் பப்பாளி என்று.

இதுபோலத்தான், சிவப்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறதே, இதுதான் நல்ல ஆப்பிள் என்று நம்பி வாங்கிவிடாதீர்கள்.

மரபணுப் பொறியியல் என்றால் என்ன?  அது எவ்விதம் செய்யப்படுகிறது?

ஒரு மீனைத் தக்காளியுடனோ, அந்துப்பூச்சியுடன் கோழிக்குஞ்சையோ ஒரு விவசாயி கலப்பின வளர்ப்புச் (ஒட்டுச்) செய்வதாகக் கற்பனை செய்யுங்கள். அபத்தமான சிந்தனையாக இருக்கிறதே என்கிறீர்களா? இது இயலாதது என்று நமக்குத் தெரியும், காரணம் இயற்கை இதை அனுமதிப்பதில்லை.

ஆனால் இன்று மரபணுப் பொறியியலாளர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஓர் உயிரியின் பாரம்பரிய வரைபட வார்ப்பினை மாற்றுவதன் வாயிலாக.
வாழும் உயிரிகளின் டிஎன்ஏ அல்லது பாரம்பரிய அமைப்பை மாற்ற விஞ்ஞானிகளை அனுமதிக்கிறது இந்தத் தொழில்நுட்பம்.

அவர்கள் டிஎன்ஏவின் இழைகளையோ, ஓர் உயிரியின் டிஎன்ஏ விலிருந்து குறித்த மரபணுக்களையோ வெட்டவும், முழுமையாகத் தொடர்பே அற்ற வேறொரு உயிரியின் டிஎன்ஏ -வுக்குள் அவற்றை ஒட்டவும் செய்கிறார்கள்.

மனிதன், விலங்குகள், பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சணங்கள், தாவரங்கள் போன்ற முழுமையாக வேறுபட்ட இனங்களிலிருந்து மரபணுக்களைக் கலப்படம் செய்யும் இந்த முறைக்குப் பலவேறு பெயர்கள் உண்டு - நவீன உயிர்த்தொழில் நுட்பம், மரபணுத் தொழில்நுட்பம், மரபணு மாற்றம், மரபுக்குறுக்கீட்டு மறுசேர்க்கைத் தொழில்நுட்பம்.

மரபணுக்களின் அடுக்கினைக் கலைத்துப்போட்டு இதுவரை இல்லாத புதிய உயிரிகளைப் படைக்கும் செயலாக இது சொல்லப்படுகிறது.

இப்படித்தான் நாம் பழங்களில் மீனின் மரபணுக்களையோ, தாவரங்களில் அல்லது வைரஸ்களில் பூச்சிகளின் மரபணுக்களையோ, மீன்களில் கோழியின் மரபணுக்களையோ, பன்றிகள் அல்லது ஆடுகளில் மனித மரபணுக்களையோ, பலவாறாகக் காணமுடிகிறது.

மரபணுப்பொறியியல் மாற்ற உணவு என்றால் என்ன?

பாடப்புத்தகத்தில் கற்றுக்கொண்டதை மரபணுப் பொறியியலாளர்கள் நாம் உண்ணும் உணவில் செயல்படுத்திப் பார்க்கிறார்கள்.

அந்த உணவுகளின் பண்புகளை மேம்படுத்துவதாக அல்லது முழுமைப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். உதாரணமாக, கடுங்குளிரைத் தாங்கமுடியாத தக்காளிகளை எடுத்துக் கொள்வோம். ஆர்க்டிக் நீரிலும் உயிர்பிழைத்திருக்கும் மீன்களையும் பாருங்கள். ஆர்க்டிக் குளிரைத் தாங்கக்கூடிய மரபணு ஒன்றைத் தட்டை மீன்களில் விஞ்ஞானிகள் கண்டனர். அந்த மீனிலிருந்து அந்த மரபணுவை மட்டும் வெட்டி, தக்காளியின் டிஎன்ஏ வில் ஒட்டினார்கள்.

இந்தப் புதிய தக்காளி கடுங்குளிரைத் தாங்க வல்லது. அதனால் நீண்டகால வளர்ச்சிப்பருவம் அதற்கு உண்டு. ஆனால் இந்த மரபணுப்பொறியியல் மாற்ற தக்காளியை நம்மால் சாதாரணத் தக்காளியிலிருந்து பிரித்துக் கண்டறிய முடியாது. மீன்களின் பக்கத் துடுப்புகளுடனோ செதில்களுடனோ தக்காளி வந்தால் அல்லவா நமக்குத் தெரியும்?

பல வாரங்களுக்கு அழுகாத, பூச்சிகளைத் தாங்கக்கூடிய தக்காளியைப் பாருங்கள்.  (பெங்களூர் தக்காளி அல்லது ஆப்பிள் தக்காளி என்று இதற்குப் பெயரிட்டிருக்கிறார்கள் கடைக்காரர்கள். நம் ஊர்த் தக்காளி நாட்டுத் தக்காளியாம்.) களைக்கொல்லிகளையும், வைரஸ்களையும், பூஞ்சணத் தாக்குதல்களையும் தடுக்கக்கூடியவை இவை. அதேபோலப் பெரிய அளவில் உள்ள, பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் நன்றாக இருக்கக்கூடிய பழங்களையும் காய்களையும் பாருங்கள்.

இலாப நோக்கு விவசாயிகள், உணவு விளைவிப்பவர்கள், சிறு வியாபாரிகள் ஆகியோர்க்கு இவ்வகைப் பண்புகள் பிடித்திருக்கின்றன. அவற்றால் அதிக இலாபம் பெறமுடியும். ஆனால் இவ்வகை உணவு நமக்கு நல்லதா? என்பது முறறிலும் யோசிக்க வேண்டிய விசயம்.

உதாரணமாக, மரபணுப்பொறியியல் மாற்ற உணவுகள் பல வாரங்களாக ரிலையன்ஸ், ஹெரிடேஜ், மோர் போன்ற பெருங்கடைகளில் இருந்தபோதும், அவை புதியவை என்பது போலக் காட்சியளிக்கின்றன. நன்கு சிவப்பாகவும் புதியதாகவும் காணப்படும் அவற்றில் எந்த ஊட்டச்சத்தும் மிஞ்சியிருக்காது. அழுகவியலாத் தக்காளிகளில் பாக்டீரியாக்களின் மரபணுக்கள் உள்ளன.

வாசனை-ருசித் தக்காளி வகை ஒன்று 1994 இல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலும் குறைகள் இருந்தன. அது மிக மிருதுவாகவும் எளிதில் அடிபடக்கூடியதாகவும் இருந்தது. செடியும் உறுதியாக இல்லை. நுகர்வோர் அதன் விசித்திரமான உலோகச்சுவை பற்றிக் குறைகூறினார்கள்.

அதனால் 1994 இல் ஃபுளோரிடா மாகாணத்தில் அந்தத் தக்காளியின் முழு விளைச்சலும் பயன் இல்லாமல் போனது. கடைசியாகத் தோல்வி என ஒப்புக்கொள்ளப்பட்டு, கைவிடப்பட்டது.

அதேபோலப் பூச்சியெதிர்ப்புப் பருத்தி ஒன்று 1997 இல் அறிமுகமாயிற்று. இது தனக்குள்ளேயே பூச்சிக்கொல்லியை உருவாக்கிக் கொள்ளவல்லது. அமெரிக்க நாட்டில் இலட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டபோது, செடிகளிலிருந்து பருத்திப்பந்துகள் தானாகவே உதிர்ந்துவிட்டன. விவசாயிகள் அமெரிக்க அரசாங்கத்திடம் கேட்ட இழப்பீடு ஒரு மில்லியன் டாலரையும் தாண்டியது.

மரபணுப்பொறியியல் மாற்ற தொழில்நுட்பங்களுக்கு குறிப்பிட்ட முன்னேற்றம் காணும்போது எதிர்பாராத வகையில் உயர்கொல்லி நோய்கள் அல்லது மரபணு பேருருத் தன்மைக்குக் காரணமான சில புதிய நச்சுக்கிருமிகள் உருவாகக்கூடும்.

சில கட்டுப்பாட்டுடன் கூடிய பரிசோதனைத் தளங்களின் மூலமாக ஆய்வு செய்ததில் மரபணுப்பொறியியல் மாற்ற விதைகளைப் பயன்படுத்துவதால் பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லி மருந்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் விவசாய நிலங்களில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைத்தால் மண்ணின் தன்மையுடன் நுண்ணுயிரின் மரபணு எப்படிச் செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்களால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.

மரபணுப்பொறியியல் மாற்ற உயிர்கள் காட்டு உயிர்களுடன் கலப்பு சேர்க்கை கொண்டு இயற்கையான இனங்களின்  மரபு ஒருங்கிணைப்பை நிலையாக மாற்றிவிடும் என்ற கவலையும் உள்ளது.

மரபணுப்பொறியியல் மாற்ற இனங்களில் உள்ள மரபணு சம்பந்தப்பட்ட களை உயிர்களிடத்திலும் சென்று சேர்கிறது  என்பதும், மரபணு மாற்றப்படாத பயிர்களோடு கலப்பு சேர்க்கை செய்துவிடுகின்றன என்பதும் கவலைக்குரியதாக உள்ளது.

மரபணு பொறியியலின் இன்னொரு பாதக விளைவாக ஒரு பகுதியின் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப விளையும் பயிர்களை அழிப்பதில் உள்ளது.

அத்தியாவசிய மரபுரிமையைப் பெற்றிருக்கும் உள்ளூரில் உருவாக்கப்பட்ட விதைகள் தற்போதைய கலப்பு பயிர்கள் மற்றும் மரபணு மாற்ற விதைகளிடம் தொலைந்து போகக்கூடிய சூழ்நிலையைப் பெற்றிருக்கின்றன.

ஒரு பகுதியில் கலப்பு வணிக விதைகளையும், மரபணுப்பொறியியல் மாற்ற விதைகளையும் அறிமுகப்படுத்துவது உள்ளூர் நில இனங்களோடு கலப்பு சேர்க்கைக்கான அபாயத்தை கொண்டு வருகிறது. ஆகவே மரபணு மாற்றம் நில இனங்களின் நீடிப்புத் தன்மை மற்றும் பாரம் பரிய கலாசாரங்களை அச்சமூட்டுகிறது.

மரபணுப்பொறியியல் மாற்ற முறையில் உருவான பூச்சி எதிர்ப்பு நஞ்சினைத் தாவரங்களாவது தங்கள் பாகங்கள்  முழுவதும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெறுகின்றன. இதனால் இப்பயிர்கள் அறுவடைக்குப் பின்னர் கழிவாகிப் புதைவதனால் மண் முழுவதும் நச்சுத் தன்மை கொண்டதாக மாறி விடுகிறது.

இந்த நச்சுத் தன்மையையும் அப்பயிர்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அது மற்ற உயிரினங்களான மனித குலத்திற்கு சேவை செய்யும் தேனீ, சுருள்பூச்சி வண்ணத்துப் பூச்சி மற்றும் முக்கியமாக விவசாயிகளின் நண்பனாக மண்புழு ஆகியவற்றைக் கொன்று விடும். இது மட்டுமின்றி அந்த நிலங்களில் மேயும் ஆடு, மாடுகள் மற்ற உயிரினங்கள் இறந்து விடுகின்றன.

ஆந்திராவில் பி.டி பருத்திச் செடியை சாப்பிட்ட 1500 க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துவிட்டன. ஆந்திராவில் கரீம் நகரிலிருந்து 80 கி. மீ. தொலைவில் உள்ள மாமிடலப்பள்ளி கிராமத்தில் பி. டி. பயிரிடப்பட்ட நிலத்தில் மேய்ந்த 12  மயில்கள் இறந்து விட்டன.

சில காலத்திற்கு முன்னதாக மான் சான்டோ என்ற பன்னாட்டு கம்பெனி மரபணு பொறியியல் மூலமாக தயாரிக் கப்பட்ட பருத்தி விதைகளை இந்தியா வில் அறிமுகப்படுத்தியது. அதிக சிறந்த அறுவடை கிடைக்கும் என்ற இந்த கம்பெனியின் பொய்ப் பிரசாரத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் அதிக கடன் வாங்கி இந்த விதைகளை பயிரிட்டனர். ஆனால் இவை மறுபடியும் பயிரிட முடியாத மலட்டு விதைகள் என்பதாலும் அதிக அறுவடை கிடைக்காததாலும் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர்.

“ஒரு மரபணுப்பொறியியல் மாற்ற உணவின் மாற்றப்பட்ட பெரும்பான்மைப் பண்புகள் அதே போன்ற இயற்கை உணவின் பண்புகளுக்கு ஒத்தவையாக இருந்தால், அந்த  மரபணுப்பொறியியல் மாற்ற உணவு இயற்கை உணவைப் போன்றே, எல்லா விதங்களிலும் இருக்கவேண்டும்”.

இந்த விளக்கம் தர்க்கத்துக்கு முரணானது. நான்கு கால்கள்,
மீசைகள், ஒரு வால், இரு காதுகள், உடல் முழுவதும் மயிர் போன்ற ஒரே மாதிரிப் பண்புகளைக் கொண்டுள்ளதால், ஒரு நாயும் எலியும் சமமாகி விடுமா?

விலங்குகளையும் மனிதர்களையும் பயன்படுத்தி, மிகுதியான செலவு பிடிக்கின்ற, காலவிரயம் செய்கின்ற, நீண்டகாலச் சோதனைகளின் தேவை இன்றியே தங்கள் விளைபொருள்களை எவ்வளவு விரைவாக விற்கமுடியுமோ அவ்வாறு விற்பதற்காக உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்கள் மிகச் சாதுரியமாக பிரச்சாரம் செய்துவருகின்றன.

துரதிருஷ்டவசமாக, நம்நாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் ஒழுங்குபடுத்தும் அமைப்புகளும் தொழிலகங்கள் கண்டுபிடித்த இந்த “சாராம்சச் சமன்மை” யின் சட்ட நிபுணத்துவ நுட்பத்தை ஒப்புக்கொள்கின்றன.

நுகர்வோரும் ஏமாற்றப்படுகிறார்கள். அதை அரசாங்கமும் ஏற்றுக் கொள்கிறது. பெரிய பெரிய முதலாளிகள் இலாப நோக்கத்துடன் இதை வரவேற்கிறார்கள்.

அதனால் மரபணுப்பொறியியல் மாற்ற விளைபொருட்கள் உணவுப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், கடுமையான நீண்டகாலச் சோதிப்புகள், அடையாளப்படுத்துதல் (அதாவது இவை செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை என்று லேபில் இடுதல்) உட்பட்ட செயல்களைத் தவிர்த்து வந்துவிடுகின்றன. நம் நாட்டில் இனி நமக்கு எந்தவிதப் பாதுகாப்புமே இல்லை.

1 comment:

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...