Saturday, October 11, 2014

மெதுவாக உண்ணுங்கள்! ஆரோக்கியமாக வாழுங்கள்!



இன்றைய உலகமானது அவசரமும், நேர நெருக்கடி மிக்கதாகவும், உணவின் சுவையை இரசிப்பதற்கோ, நன்கு மென்று தின்பதற்கோ நேரமின்றி வாயில் போடுவதும் விழுங்குவதுமாக அடித்துப் பிடித்து கொண்டு ஓடுகிறார்கள்.  நிறைய சம்பாதிக்கின்றார்கள், அதனை அப்படியே பிற்காலத்தில் மருத்துவத்திற்காக செலவும் செய்கின்றார்கள்.
 
காரணம் தன் உடலைப்பறிய விழிப்புணர்வு இல்லாமை, இதனால் அறியாமை மக்கள் தன்னையும், தன் உடலுறுப்புக்களையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய வயதில் விட்டு விட்டு, வயதானபின்பு அனைத்து நோய்களையும் தருவித்துக்கொண்டு குணப்படுத்த முயற்சி செய்து என்ன பயன்?




மெதுவாக உண்ணல் ஆய்வுகள்

அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது, மெதுவாகச் சாப்பிடுவதானது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் எனச் சொல்கிறது. 35 அதிக எடையுள்ளவர்களையும் 35 சாதாரண எடை உள்ளவர்களையும் கொண்டு 2 நாட்களுக்கு மட்டும் செய்யப்பட்ட ஆய்வு பற்றிய தகவல் Journal of the Academy of Nutrition and Dietetics  என்ற பத்திரிக்கையில்  வெளியாகியுள்ளது.

அதன் பிரகாரம் சாதாரண எடை உள்ளவர்கள் மெதுவாகச் சாப்பிடும்போது வழக்கத்தைவிட 88 கலோரிகள் குறைவாகவே உள்ளெடுத்திருந்தனர். ஆனால் அதிக எடையுள்ளவர்கள் 58 கலோரிகள் குறைவாக உள்ளெடுத்திருந்தனர். வேறுபாடுகள் இருந்தபோதும் உட்கொண்ட கலோரி வலுவில் குறைவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உணவின் அளவு கட்டுப்படுத்தப்படவில்லை. தங்கள் தேவைக்கு ஏற்ப உண்ட போதும் இது நடந்தது.

மெதுவாகச் சாப்பிடுவது என்பது சுமார் 22 நிமிடங்களை எடுத்தது. விரைவாகச் சாப்பிடுவது என்பது சுமார் 8 நிமிடங்களை எடுத்தது.

மெதுவாகச் சாப்பிடும்போது அதிக எடையுள்ளவர்கள் வழக்கத்தைவிட அதிகமாக நீர் அருந்தினார்கள் எனவும், அந்த ஆய்வு கூறியது.


அதே வேளை சாதாரண எடையுள்ளவர்கள் சற்றுக் குறைவாக  நீர் அருந்தினார்களாம்.

இதைத் தவிர ஜப்பானில் 1700 இளம் பெண்களிடையே செய்யப்பட்ட மற்றொரு ஆய்வும்  மெதுவாகச் சாப்பிடுவதால் விரைவிலேயே வயிறு நிறைந்த உணவு ஏற்படுகிறது என்றும், அதனால் அவர்கள் உள்ளெடுக்கும் உணவின் கலோரி குறைவாகவே இருக்கிறது எனவும் கூறியது.

University of Rhode Island செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது மெதுவாக உண்பவர்கள் நிமிடத்திற்கு 28.4 கிராமை உட்கொள்வதாகவும், இடை நடுவான வேகத்தில் உண்பவர்கள் நிமிடத்திற்கு 56.7 கிராமை உட்கொள்வதாகவும், வேகமாக உண்பவர்கள் நிமிடத்திற்கு 88 கிராமை உட்கொள்வதாகவும் கண்டறிந்தது.

 
மெதுவாக சாப்பிடுவதால் வரும் நன்மைகள்




இவற்றை அடிப்படையாகக் கொண்டு மெதுவாக உண்பதின் நன்மைகளை நாம் சுலபமாக அறியலாம். மெதுவாகச் சாப்பிடும்போது குறைந்த அளவு கலோரிகளே உள்ளெடுக்கப்படுகிறது. இது ஏன்?

விரைவாகச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது. எனவே அதிகமாக உணவை உட்கொண்டுவிடுவார்கள். மாறாக மெதுவாகச் சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே உணவு உட்கொள்ளப்படுவதால் ஓரளவு உண்ணும்போதே 20 நிமிடங்கள் கடந்துவிடும். அப்பொழுது வயிறு முட்டிப்போச்சு என்பது தெரியவரும். மேலதிகமாக உட்கொள்ள நேராது.


மெதுவாகச் சாப்பிடும்போது நீர் அருந்துவதற்கான வாய்ப்பு அதிகம் கிடைப்பதால் உணவின் இடையே அருந்துவார்கள். இதுவும் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உணவின் அளவைக் குறைக்கச் செய்யும்.

நிதானமாகச் சாப்படும்போது நன்கு மென்று உண்ணக் கூடியதாக இருக்கும். மென்று உண்ணுவதால் உணவு சற்று அதிக நேரம் வாயிற்குள் இருக்கும். இதனால் உணவுச் செரிமானம் எச்சிலின் உதவியுடன் ஆரம்பித்து விடுகிறது. எனவே மெதுவாகச் சாப்பிடும் போது உணவு நன்கு ஜீரணமும் ஆகும்.

உணவை மெதுவாகச் சாப்பிடும்போது நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும் என்பது உண்மையே.

மெதுவாக உண்ணும்போது சுவைகளை சப்புக்கொட்டி ரசிக்க முடிகிறது.

வாசனையை நன்கு நுகர முடிகிறது. உணவு தயாரிக்கப்பட்ட விதத்தையும் அதன் பதத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் மனத் திருப்தி ஏற்படுகிறது.  இதனால் உணவு உண்ணும் செயற்பாடானது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.

உணவு வேளையை மேலும் மகிழ்ச்சியாக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

இரசனையோடு உண்ணுங்கள்

உணவு உண்ணும் போது வேறு சுவாரஸ்யமான விசயங்களில் மனதைச் செலுத்தாதீர்கள். தொலைக்காட்சி பார்ப்பது, விவாதங்களில் ஈடுபடுவது, பாடல்களை கேட்டுக்கொண்டேசாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது போன்றவற்றைத் தவிருங்கள்.



உணவில் மட்டுமே மனதைச் செலுத்துங்கள். நாக்கும் மூக்கும் உங்கள் சுவை உணர்வை மிகைப்படுத்தி அரிய அனுபவத்தைக் கொடுக்கும்.


பழங்களும் காய்கறிகளும் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். இவற்றைச் சப்பிச் சாப்பிட கூடிய நேரம் தேவைப்படுவதால் நீங்கள் மெதுவாகச் சாப்பிட முடியும். அது மேற்கூறிய நன்மைகளைத் தரும்.


மெதுவாகச் சாப்பிடுங்கள் என்பது சொல்வதற்கு சுலபம் ஆனால் மும்மூரமான வேலையில் இருக்கும் போது ஆற அமர இருந்து சாப்படுவது கஷ்டம்தான். ஆனால் உணவு நேரங்களை ஒழுங்குமுறையில் கடைப்பிடித்து நேரம் தவறாது உண்ணுங்கள்.  

ஒழுங்கு முறையைக் கடைப்பித்தால் நேரம் ஒதுக்குவதில் சிரமமிருக்காது. ஒவ்வொரு உணவு வேளைக்கும் குறைந்தது 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஒதுக்குங்கள்.

அத்துடன் ஒரு நேர உணவிற்கும் அடுத்த உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மெதுவாகச் சாப்பிடுங்கள். நலம் மிக்க ஆரோக்கியமான ஒல்லியான உடல் நிலைக்கு மாறி மகிழுங்கள்.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...