Thursday, August 13, 2015

பஞ்சகவ்யம் என்னும் பஞ்சாமிர்தம்

 
இந்து சமயத்தில் ஐந்து என்ற எண்ணிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பஞ்சகவ்யம், பஞ்சோபசாரம், பஞ்சமகாயக்ஜம், பஞ்ச மகாபாபம், பஞ்சபூதம், பஞ்சகோசம், பஞ்சசம்ஸ்காரம், பஞ்சசபை, பஞ்சலோகம், பஞ்சதந்திரம், பஞ்சமுகம், பஞ்சாபிஷேகம், பஞ்சாங்கம், பஞ்சகங்கை, பஞ்சாமிர்தம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
பஞ்ச என்றால் ‘ஐந்து’, கவ்ய(ம்) என்றால் ‘பசுவிடமிருந்து’ அல்லது ‘பசுவினுடையது’ என்று பொருள்.

பசுவிலிருந்து கிடைக்கப்படும் ஐந்து பொருட்களை சரியான விகிதாசாரத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவை பஞ்சகவ்யம் எனப்படும்.

பால், தயிர், நெய், கோமியம், கோமயம் (பசுஞ்சாணம்) ஆகியன பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களாகும்.

இந்த ஐந்து பொருட்களுக்கும் பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றைச் சுத்தி செய்யும் திறன் உள்ளது.

பால் ஆகாசத்தைச் சுத்தி செய்யும். தயிர் வாயுவைச் சுத்தி செய்யும். நெய் அக்னியைச் சுத்தி செய்யும். கோமியம் ஜலத்தைச் சுத்தி செய்யும். கோமயம் ப்ருதிவியைச் சுத்தி செய்யும். மனித சரீரம் பஞ்சபூதங்களால் உருவானபடியால் மேற்கூறியபடி, பால், சோர்வடைந்த ஆத்ம (பிராண) சக்தியைச் சீர் செய்யும். தயிர், சீர்கெட்டுப் போன வாயுவை சரி செய்யும். நெய், உஷ்ணச் சீர்கேட்டைச் சரி செய்யும். கோமூத்திரம், நீர்க்கட்டு சம்பந்தப்பட்ட உபாதைகளைச் சரி செய்யும். கோமயம், உடம்பில் உள்ள அசுத்த மலங்களை நீக்கும்.

பஞ்சகவ்யத்தை உட்கொள்வதால் ஆத்ம சுத்தியும், சரீர சுத்தியும் அடைய முடியும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

மேலும் பஞ்சகவ்யத்தை உட்கொள்வதால் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைகிறது.

அதுபோலவே செடிகளுக்கும் பயிர்களுக்கும் செயற்கையான நச்சுப் பொருட்கள் அடங்கிய உரங்களைத் தவிர்த்து, பஞ்சகவ்யத்தை உரமாக உபயோகிப்பதன் மூலம் இயற்கை விவசாயமும் வெற்றிகரமாக நடக்கிறது.

"பஞ்ச' என்றால் ஐந்து. "கவ்யம்' என்றால் பசு மாட்டிலிருந்து கிடைக்கக் கூடிய பால், தயிர், நெய், சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றின் கலவை.

அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூலில் இந்த பஞ்சகவ்யம் பற்றிய விபரம் உத்தர ஸ்தானத்தில் வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பகுதியில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஐந்தையும் நெய்யுடன் சேர்த்து பக்குவம் செய்து சாப்பிட்டோமேயானால் வலிப்பு, ஜுரம், பைத்தியம், காமாலை போன்ற உபாதைகள் நீங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நெய் மருந்தாகக் கிடைக்கிறது.

ஒவ்வொன்றையும் சம அளவு சேர்க்க வேண்டும் என்று சரக ஸம்ஹிதையில் கூறப்படுகிறது. ஆனால் பசுநீர் 1 பங்கு, பசும்சாணம் 1 1/2 பங்கு, பால் 8 மடங்கு, நெய் 4 பங்கு, தயிர் 5 பங்கு என்ற விகிதத்தில் சேர்ப்பது சம்பிரதாயமாகும் (ஸித்த யோகம்).

மகாபஞ்சகவ்யகிருதம் என்ற பெயரிலும் ஒரு நெய் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

தசமூலம், திரிபலை, மஞ்சள், மரமஞ்சள், வெட்பாலைப்பட்டை, ஏழிலம்பாலை, நாயுருவி, அவுரி, கடுகரோஹிணீ, கொன்றை, புஷ்கரமூலம், பேயத்தி வேர், காஞ்சொறி இவற்றை வகைக்கு 2 பலம் எடுத்து 16 பிரஸ்த நீரிலிட்டுக் காய்ச்சி நான்கில் ஒரு பங்கு ஆகுமாறு குறுக்கி அதில் சிறுதேக்கு, வட்டத் திருப்பி, துவரை, சிவதை, நாகதந்தீ, திரிகடுகு, வாசனைப் புல், பெருங்குரும்பை, ஓமம், நிலவேம்பு, யானைத் திப்பிலி, நன்னாரி, பெருநன்னாரி, மல்லிகை (காட்டாத்தி என இந்து முனிவர். காட்டு மல்லிகை எனச் சிலரும், மருதோன்றி எனச் சிலரும் கூறுவர்), கொடிவேலி, நொச்சி ஆகியவற்றை வகைக்கு 1/4 பலம் எடுத்து கல்கமாக்கி கலப்பதுடன் முன் கூறப்பட்ட பஞ்சகவ்ய திரவப் பொருட்கள் நான்கையும் சேர்த்து ஒரு பிரஸ்தம் நெய் பக்குவம் செய்து கொள்ள வேண்டும். இது “மகாபஞ்சகவ்யம்” எனப்படும்.

இது விசேஷமாக ஜுரம், வலிப்பு, மகோதரம், பவுத்திரம், வீக்கம், மூலம், காமாலை, பாண்டு, குன்மம், இருமல், கிரஹபீடை ஆகிவவற்றைப் போக்கும்.
வலிப்பு நோய் உள்ளவருக்கு இந்த நெய் மருந்தை அப்படியே கொடுத்துவிட முடியாது.

வாயுவால் உண்டான வலிப்பை, பஸ்தி எனும் எனிமா முறையாலும், பித்தத்தால் உண்டான வலிப்பை, பேதி மருந்தாலும், கபத்தால் உண்டான வலிப்பை, வாந்தி சிகிச்சையாலும் குடல் சுத்தி முறைகளைச் செய்த பிறகு, கஞ்சி முதலியவற்றால் உடலைத் தேற்றி, அதன் பிறகே வலிப்பு நோயை அடக்குவதற்கும், நீக்குவதற்கும் “பஞ்சகவ்யகிருதம்” எனும் நெய் மருந்தைச் சாப்பிட வேண்டும்.

மற்ற மருத்துவமுறைகளால் கண்டறியப்படாத மனோவஹஸ்தரோதஸ், அதாவது மனதின் திட்டங்களையும் செயல்களையும் ஏந்திச் செல்லும் குழாய்களைப் பற்றிய விபரங்களை ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறது.

தினமும் ஓரிரு ஸ்பூன் பஞ்சகவ்ய நெய் மருந்தைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், புத்தியும் மனமும் கலக்கமடையாமல் தெளிவான சிந்தனையும், சிந்தனைக்கேற்ற செயல்பாடுகளும் ஏற்படும்.

கவலை, வருத்தம், பயம், காமம், குரோதம் முதலியவற்றால் மனம் கலக்கப்பட்ட நிலையில், கோபமடைந்த மனம், உடல் ஆகியவற்றின் ரஜோகுண, தமோகுண வாயு தோஷங்களால் இருதயம் நிரம்பப் பெற்று, ஸத்வ குணம் குலைந்து, உணர்வை எடுத்துச் செல்லும் குழாய்களிலும் தோஷங்கள் பரவிய நிலையில் தமோ குணத்தை அடைந்தவராகி அறிவுகுன்றி அருவருக்கத்தக்க சேஷ்டைகளைப் புரிபவர்களுக்கு, இந்த மஹாபஞ்சகவ்ய நெய் மருந்தானது ஒரு வரப் பிரசாதமாக அமையும்.
அந்த அளவிற்கு இது மனதில் அமைதியைத் தோற்றுவிக்கும்.

குடல், இதயப்பகுதி, உட்புறக் குழாய்கள், மூச்சுப்பாதை போன்ற முக்கியமான பகுதிகளில் சேரக் கூடிய கிருமித் தொற்று, அடைப்பு, சுருக்கம், தளர்ந்தநிலை, செயல்திறன் குன்றுதல் போன்ற உபாதைகளை பஞ்சகவ்யக்கிருதத்தினை தொடர்ந்து உட்கொள்வதினால் நீங்கிவிடக் கூடிய சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் மனதைச் சார்ந்த உபாதைகள் பெருகி வருகின்றன. அவற்றுக்கு பஞ்சகவ்ய - மஹா பஞ்சகவ்ய நெய் மருந்துகள் ஒரு சிறப்பான தீர்வைத் தரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...