Tuesday, June 24, 2014

வீடுகளின் உற்புறக் காற்று மாசடைதல்


சிலரது வீட்டில் காற்றோட்டம் போதுமான அளவு இருக்காது. சரியானபடி ஜன்னல்கள் இல்லாமலோ, அப்படியே ஜன்னல்கள், கதவு இருந்தாலும் இயல்பாக திறந்து வைக்க முடியாத சூழலிலோ அவர்கள் வீட்டின் அமைப்பு இருக்கலாம், இதனால் அங்கு காற்றோட்டம் குறைந்து, அந்தக் காற்று மாசடைந்ததாக இருக்கும். 

மேலும் வீட்டின் காற்று மாசடைதலுக்கு முக்கிய காரணம் சிகரெட் புகைத்தல், கம்ப்யூட்டர் சாம்பிராணி என்ற ரசாயண வில்லையை பூசை அறையில் உபயோகிப்பது, அத்துடன் தரமற்ற ஊதுபத்தி போன்ற புகைகளை வெளிவிடும் சிலவற்றாலும், பழைய வீடுகளில் விறகு அடுப்பு உபயோகிப்பது போன்றவைகளாலும் காற்று மாசு அடைகின்றது.

இவ்வாறு வீட்டின் உற்புறக் காற்று மாசடைவது என்பது உலகளாவிய ரீதியில் சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளது.

உலகளாவிய ரீதியில் வருடந்தோரும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் சுவாச நோய்களால் மரணமடைவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் பெரும்பாலானவர்கள் சிற்றுண்டி விடுதிகளிலோ, அல்லது வீடுகளில் பயன்படுத்தப்படும் விறகு அடுப்புப் புகைகளாலும், சிகரெட், வாசனை ஊதுபத்தி, ரசாயண சாம்பிராணி ஏற்படுத்தும் மாசுக்களால் ஆகும். சுகந்த மணத்தை ஏற்படுத்தும் புகைகளும் அத்தகையவையே.

ஆய்வு

வீட்டிற்குள் சாம்பிராணிக் குச்சி போன்ற வாசனை ஊது பத்திகளைக் கொழுத்துவதானது வீட்டின் உற்புறக் காற்றை மாசுபடுத்தி சுவாசப்பையில் உள்ள காற்று அறைகளில் அழற்சியை ஏற்படுத்துகிறது என அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.

அரேபிய நாட்டு வீடுகளில் அதிகம் கொழுத்தப்படும் இருவகை சாம்பிராணிகளைப் புகைக்க வைக்கும்போது வெளிவரும் துகள்களையும் வாயுக்களையும் ஆய்வாளர்கள் இனங்கண்டார்கள். பின்னர் மனிதர்கள் சுவாசிக்கும் அறைகளில் அந்த வாசனைப் பொருட்களை புகைக்க வைத்தார்கள். அப்பொழுது அந்த வாசனைத்திரவியங்கள் தடவப்பட்ட ஊதுபத்திகளால் வெளிப்படும் புகையினால் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதே மாற்றங்களை ஒத்ததாக இருந்ததைத் கண்டறிந்தார்கள்.

Oudh, Bahkoor ஆகிய அந்த வாசனைப் பொருட்கள் அகர் மரத்திலிருந்து எடுக்கபட்டவையாகும். வாசனையைக் கொடுக்கும் சந்தன மரப்பிசின், சில எண்ணெய் வகைகள் போன்றவைகளும் அதில் கலந்திருந்தனவாம். அவற்றை எரிக்கும் போது carbon monoxide, formaldehyde, nitrogen oxides ஆகிய வாயுக்கள் வெளியேறி அறையின் காற்றை மாசடையச் செய்தன.

'எனவே இவற்றை எரிக்கும்போது வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைத்து அப்புகையை வெளியேறச் செய்து வீட்டின் காற்றை மாசடையாது காப்பது அவசியம்' என்கிறார்கள் University of North Carolina at Chapel Hill சேர்ந்த ஆய்வாளர்கள்.

இவர்கள் முன்பு செய்த மற்றொரு ஆய்வானது இந்த சுகந்த மணப் புகைகளால் கண், காது தொண்டை, சருமம் போன்றவற்றில் எரிச்சல் ஏற்படவும், ஆஸ்துமா, வேறு சுவாச நோய்கள், தலைவலி, இருதய நோய்கள் போன்றவையும் ஏற்படலாம் என்கின்றனர்.

உட்புற காற்று மாசடைதல்


உட்புற காற்று மாசடைதல் என்பது வீட்டுக்குள் மாத்திரம் அல்ல. வீடு, தொழில் செய்யும் இடம் அனைத்தையும் உள்ளடக்கும்.

உட்புற காற்றின் தரம் குறைவடைவதால் கிருமித் தொற்றுகள் ஏற்படுகின்றன. சுவாசப்பை புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அத்துடன் ஆஸ்துமா போன்ற நீண்டகாலமாக தொடரும் சுவாச நோய்கள் வருவதற்கான சாத்தியமும் அதிகரிக்கிறது.
மூக்கடைப்பு, கண் வரட்சி, ஓங்காளம், களைப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஏற்கனவே சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு அது மிகவும் மோசமான விளைவுகளைக் கொடுக்கும்.

இதைத் தடுப்பதற்கு வழி என்ன?

மிக முக்கியமான விசயம் காற்றை மாசடையச் செய்யும் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதுதான். அத்துடன் காற்றோட்டத்தை அதிகரித்து சுத்தமான காற்று உள்ளே வருவதற்கான வழிகளை மேம்படுத்த வேண்டும்.



உட்புறக் காற்று மாசடைவதற்கான சில முக்கிய காரணங்கள்
--------------------------------------------------------------------------------------------------


உயிரியல் மாசுக்கள்

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சணம், விலங்கு எச்சங்கள், தூசி, பூச்சி மற்றும் கரப்பான், பல்லி போன்றவற்றின் எச்சங்கள், போன்றவை உயிரியல் மாசு என்பதில் அடங்கும். 
இவற்றினால் உடலில் கிருமித் தொற்று ஏற்படுகிறது. ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அத்துடன் ஆஸ்துமா தூண்டப்படுவதற்கும் காரணமாகிறது. இவைகள் சாதாரணமான சிறிய பிரச்சனை எனச் சிலர் எண்ணினாலும் இவற்றால் உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலை நாட்களில் வருமான இழப்பு ஏற்படுகிறது. அத்துடன் பிள்ளைகளின் கல்வியும் பாதிப்படைகிறது. 


நாய் பூனை போன்றவற்றை வீட்டின் உள்ளே நுழையாது தடுப்பது முக்கியம். அத்துடன் தூசி மற்றும் பூச்சியின் தாக்கத்தைத் தடுப்பதற்கு படுக்கை விரிப்பு, தலையணை உறை, துணியாலான கால் மிதிகள், மேசை, மற்றும் தரை விரிப்புகள் ஆகியவற்றை அடிக்கடி துவைப்பதுடன் வெயிலில் உலர வைப்பது அல்லது இஸ்திரி போடுவது அவசியமாகும். தேவையற்ற குப்பை கூளங்களை அகற்ற வேண்டும்.

மறைமுகப் புகைத்தல்

மறைமுகப் புகைத்தல் (Secondhand Smoke) என்பது ஒளிந்திருந்து புகைப்பது என்பதல்ல. தான் புகைக்காவிட்டாலும் சுற்றுப்புறச்சூழலில் மற்றவர்கள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பையே குறிக்கிறது. 
கார்பன் மொனோ ஒட்சைட், போர்மல்டிஹைட் உட்பட சுமார் 200 க்கு மேற்பட்ட புற்றுநோயைத் தோற்றுவிக்கக் கூடிய நச்சுப் பொருட்கள் மறைமுகப் புகைத்தலால் காற்றில் கலக்கின்றன. இதனால் சுற்றுப்புறம் பாதிக்கப்பட்டு, சுகாதாரக்கேடும் உண்டாகின்றது.


அமெரிக்காவில் மட்டும் இவ்வாறு வீட்டுக்குள் காற்றில் கலக்கும் சிகரெட் புகையினால் 3000 க்கும் மேற்பட்டவர்கள் சுவாசப்பை புற்று நோயால் இறக்கின்றனராம். அத்துடன் 50,000 க்கும் அதிகமான பேர்கள் இருதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனராம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளிடத்திலும் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. நிமோனியா, சளி, இருமல், மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள், காதில் கிருமித் தொற்று போன்றவை ஏற்படுகின்றன. வீட்டில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆஸ்துமா தோன்றுவதற்கும், ஏற்கனவே இருக்கும் ஆஸ்துமா மோசமடைவதற்கும் இந்த மறைமுகப் புகைத்தல் காரணமாகிறது.

இதைத் தடுக்க ஒரே வழி புகைக்காதிருப்பதுதான். அத்துடன் குழந்தைகளுக்கு அருகிலும், வீடு, தொழிலகம், உணவு சாலைகள் போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் புகைக்காதிருக்க வேண்டும்.

எரிப்பதால் வரும் மாசுபாடுகள்


விறகு, காஸ், எண்ணெய், நிலக்கரி, போன்ற எதை எரிப்பதாலும் வெளியாகும், புகை மற்றும் வாய்வுகள் காற்றை மாசடையச் செய்யும். அடுப்பு, விளக்கு, குளிர் காயும் இடம் போன்றவற்றிலிருந்து வெளியாகும் புகைகள் உதாரணங்களாகும்.

வெளிப்படையாகத் தெரியும் புகையை விட நிறமும் மணமும் அற்ற வாய்வான கார்பன் மொனோ ஒட்சைட், நைட்ரஜன் டை ஒட்சைட் போன்றவை ஆபத்தானவை. தலையிடி, ஓங்காளம், தலைச்சுற்று, களைப்பு போன்ற அறிகுறிகளை கார்பன் மொனோ ஒட்சைட் கொண்டு வரும். அதன் செறிவு அதிகமாயின் ஆர்பாட்டமின்றி மரணத்தையும் கொண்டு வரலாம். நைட்ரஜன் டை ஒட்சைட் வாயுவால் கண், காது தொண்டை ஆகியவற்றில் அரிப்பு, மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்படும். அத்துடன் கிருமித் தொற்றுகளுக்கும் வித்திடும்.

ரேடான் (Radon)

ரேடான் என்பது கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் காற்று வடிவக் கதிரியக்கத் தனிமமாகும்.

இது வீட்டின் சுவர், நிலம், அஸ்திவாரம், வடிகால்கள் போன்றவற்றில் ஏற்படும் வெடிப்புகளிலிருந்து வெளியேறுகிறது. இதனால் அமெரிக்காவில் மாத்திரம் வருடந்தோறும் 21,000 பேர் சுவாசப் புற்றுநோயால் நோயால் மரணமடைகிறார்கள் என அறிக்கைகள் கூறுகின்றன. நமது நாடுகளில் இது பற்றிய விழிப்புணர்வு கிடையாது.

ஆஸ்பரோஸ் அல்லது கல்நார்

கூரைத் தகடுகளாக உபயோகிக்கும் ஆஸ்பரோஸ் ஆனது நுண்ணிய நார்களாலானது. இதன் தூசியிலிருந்து ஆஸ்பரோசிஸ் (asbestosis ) எனப்படும் சுவாசப்பை அழற்சி, சுவாசப் புற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது.

இதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்டலாம் என்பதால் அவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்காகவே மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இன்னும் ஏராளம்

இவற்றைத் தவிர தினசரி நாம் உபயோகிக்கும் இன்னும் பல பொருட்கள் காற்றை மாசுபடுத்துகின்றன. 

ஓட்டுப் பலகை, தரைக்கம்பளம் போன்றவற்றை ஒட்டுவதற்கு பயன்படுத்தும் திரவத்திலிருந்து வரும் போர்மல்டிஹைட் ஆனது கண் எரிச்சல், இருமல், தொண்டை அரிப்பு, சரும அழற்சி, தலையிடி, தலைப்பாரம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

வீடு, கழிப்பறை, சமையலறை போன்ற இடங்களை சுத்தப்படுத்தும் ரசாயணப் பொருட்கள் (Detergents, disinfectant cleaners) கரப்பான், எலி போன்றவற்றிற்கான கிருமிநாசினிகள், பெயிண்ட் வகைகள் போன்றவையும் காற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன. அவற்றை உபயோகிக்கும் போது, பயன்படுத்தும் முறை பற்றி தயாரிப்பாளர்கள் தந்த குறிப்புகளை சரியாகக் கடைப்பிடிக்க வேணடும். 

ஒவ்வாமை

இன்று ஒவ்வாமை எனப்படும் அல்ர்ஜியுடன் தொடர்புடைய நோய்கள் அதிகரித்துள்ளன. கண் எரிச்சல், காது அரிப்பு, தும்மல், மூக்கில் ஒழுகுதல், தொண்டை அரிப்பு, இருமல், ஆஸ்துமா மற்றும் சருமநோய்கள் யாவும் அதிகரித்துள்ளன. ' சுற்றுச்சூழுல் மாசடைகிறது, கவனிப்பார் இல்லை' என அரசையும் மற்றவர்களையும் குறை கூறுகிறோம். 

நமது சூழலை, நமது வீட்டை, அதன் காற்றை சுத்தமாக வைத்திருக்க நாம் என்ன செய்திருக்கிறோம்? என நம்மை நாமே கேட்பது பயனுள்ளது ஆகும்.

வெடிப்புள்ள சுவர்கள். ஜன்னல் பொருத்திய இடத்துப் பிரிவுகள், அழுக்கான பூஞ்சணம் படிந்த சுவர்கள், புகை அடுப்பு, விளக்குத் திரி, சாம்பிராணிக் குச்சி, ஊதுபத்தி, கரைந்து உதிரும் பெயிண்ட் எனப் பலவற்றையும் அலட்சியம் செய்து விடுகிறோம். நமது வீட்டின் உட்புறக் காற்றை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அதற்கு விலையாக பல நோய்களை வாங்க வேண்டியது வரும்.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...