வாழும் போதே சாவது...என்பார்களே அதை அனுபவித்து பார்ப்பது அரிது. ஆனால் யானைக்கால் நோயாளிகளை கேட்டால் அதன் வேதனை தெரியும். எய்ட்ஸ், தொழுநோய், சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களின் மீது அரசாங்கம் காட்டிய அக்கறையை இந்த யானைக்கால் நோய் மீது காட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் மெல்லமெல்ல பரவி வருகிறது யானைக்கால் நோய். மக்களிடம் இந்த நோயின் தாக்கம் மிக மெதுவாக இருப்பதால் என்னவோ, அரசும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை யானைக்கால் நோயாளிகள் இருக்கிறார்கள் என்ற விவரம் அரசிடம் சரியான புள்ளிவிவரங்களுடன் இல்லை என்பதே உண்மை.
மருத்துவ உலகம் மிக வேகமாக நவீனப்பட்டுக் கொண்டிருந்தாலும் யானைக்கால் நோய்க்கு என்று ஸ்பெசாலிட்டி டாக்டர்கள் இல்லை என்பதும் ஒரு துரதிர்ஷ்டம். இதனால் என்னவோ இந்த நோயை பற்றி பெரிதாக ஆய்வுகளும் இல்லை என்றே கூற வேண்டும். மனிதனை கொல்லும் இந்த நோய்க்கு காரணம், சாதாரண கொசு என்பது ஆச்சரிமில்லை.
கொசுவால் தான் உலகின் பல இடங்களில் விதவிதமான பெயர்களில் தொற்று நோய் பரவி மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. ஆனால் வழக்கம் போல சே...இது சாதாரண கொசு என்று விட்டு விடுகிறோம்.
கால்களில் கரடுமுரடான பார்க்கவே முகம் சுளிக்க வைக்கும் மிகப்பெரிய வீக்கம், அந்த வீக்கத்திலிருந்து வடியும் நீர், அதிலிருந்து கிளம்பும் துர்நாற்றம் உடலை விட பெரியதாக இருக்கும் காலை தூக்கி வைத்து நடக்கவே சிரமம். இது தான் ஒரு யானைக்கால் நோயாளியின் தோற்றம்.
யானைக்கால் நோய் எப்படி வருகிறது?
யானைக்கால் நோய்க்கு காரணம் wucheria bancrofti என்ற கிருமி தான். இது தவிர brugia malayi, brugia timori என்ற உருண்டைப் புழுக்களும் இந்த நோயை பரப்புகின்றன. இந்த கிருமிகளை பரப்புவது கியூலக்ஸ் மற்றும் மன்சானியா என்ற கொசுக்கள் .
இந்த கொசுக்கள் ஒரு மனிதனை கடிக்கும் போது அதன் முட்டைகள் மனித உடலுக்குள் புகுந்து விடுகிறது. புழுப்பருவத்தில் உள்ள அவை மனிதனின் நிணநீர் குழாய்களுக்குள் சென்று உட்கார்ந்து கொள்கின்றன. மனிதனின் இயங்கு மண்டலத்தை இந்த நிணநீர்கள் தான் கட்டுப்படுத்துகின்றன.
ஒரு பால்பாயிண்ட் பேனாவின் ரீபிளின் அளவுக்கும் குறைவாக உள்ள இந்த நிணநீர் குழாய்களில் வாழும் புழுக்கள், ஒரு கட்டத்தில் அளவில் பெரிதாக மாறி விடுகின்றன. இவை மேலும் பல குஞ்சுப்புழுக்களை உற்பத்தி செய்கின்றன. இந்த குஞ்சு புழுக்களும் வளர்ந்து பெருகுகின்றன. இப்படி மனித உடலுக்குள் வளரும் புழுக்களால், ஒரு கட்டத்தில் மனிதனின் நிணநீர் குழாய்கள் அடைபட்டு போகின்றன.
மனிதனின் இயங்கு மண்டலத்தை கட்டுப்படுத்தும் நிணநீர் மனித உடலில் தங்கு தடையின்றி போய்வர வழியில்லாத காரணத்தால் ஒரு இடத்தில் அடைபடுகிறது. குறிப்பாக கால் பகுதியில் தான் இதன் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் காலில் ஏற்படும் அடைப்பால் கால் வீங்கி, அழுக தொடங்குகிறது.
ஒரு கட்டத்தில் காலில் வெடிப்பு ஏற்பட்டு துர்நாற்றத்ததுடன் கூடிய நீர் வடிய தொடங்குகிறது. இந்த நாற்றம் சகிக்க முடியாதது. இதனால் யானைக்கால் நோயாளிகள் எங்கும் நடக்கமுடியாமல் முடங்கி போகிறார்கள். நோய் பரவி விடும் என்ற பயத்தால், இவர்களை யாரும் அருகில் நெருங்கி பார்க்க கூட பயப்படுவதுண்டு.
இந்த யானைக்கால் நோயின் பாதிப்பு மருத்துவ உலகத்தால் 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது கட்டத்தில் யானைக்கால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இரவில் தூங்கும் போது கால்களில் வீக்கம் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் இந்த வீக்கம் குறைந்து கால்கள் சாதாரண நிலைக்கு வந்துவிடும்.
3 வது நிலையில் இரவில் கால்களில் ஏற்படும் வீக்கம் பகலிலும் இருக்கும். வீக்கம் வடியாது. 4 வது கட்டத்தில் கால்களில் ஏற்படும் வீக்கம் மேலும் மேலும் பெரிதாக மாறி கால்களில் மொறம் போன்ற வறண்ட மடிப்புகள் காணப்படும். இந்த மடிப்புகளில் வெடிப்பு விழுந்து நீர் வடியும். புண்ணாக மாறும். இந்த நிலையில் இதிலிருந்து வீசும் துர்நாற்றம் சகிக்க முடியததாக இருக்கும். இந்த நிலைக்கு முன்னதாகவே இந்த நோயாளிகளை இவர்களது உறவினர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றி விடுகின்றனர். அது தான் பரிதாபம்
இதில் உள்ள விசித்திரம் என்னவென்றால், இந்த கியூலக்ஸ் கொசு கடித்த 8 ஆண்டுகள் கழித்து தான் யானைக்கால் நோயின் தாக்கம் அறிகுறியாக வெளியில் தெரியவருகிறது என்பது தான். அதற்குள் காலம் கடந்து விட்டிருக்கிறது. அதாவது நோய்க்கிருமிகள் மனிதனின் உடலில் ஆழமாக வேரூன்றி விடுகின்றன.
ஆனாலும் மனித குலம் இதற்கு மிரளுவதில்லை. யானைக்கால் நோயின் முதல் இரண்டு கட்டங்கள் அறிகுறிகள் இருக்கும் வரை தெளிவாக அடையாளக்குறிகளை கண்டுபிடித்து விட்டால் இந்த நோயானது மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களுக்கு போகாமல் கட்டுப்படுத்திவிடலாம்.
ஆனால் யானைக்கால் நோய்க்கான அடையாளத்தை விட்டு விட்டு வேறு ஒரு நோய்க்கான அறிகுறி என்று நினைத்து தவறுதலாக வைத்தியம் செய்து வந்தால், இந்த நோயானது மெல்ல மெல்ல மேலும் தீவிரமாவி விடும்.
குறிப்பாக யானைக்கால் நோயின் முதல் இரண்டாம் அறிகுறிகளில் இடுப்பும், காலும் சேரும் இடத்தில் நெறி கட்டிய வலி மற்றும் ஓதம் இறங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகளை சரியாக கவனியாமல் விட்டு வலி மாத்திரைகளையும், ஒதத்திற்கான அறுவை சிகிச்சையையும் செய்து விட்டுவிடுவார்கள். ஆனால் இதற்கடுத்து கால்கள் இன்னும் பயங்கரமாக வீங்கிவிடும். அப்போது தான் தெரியும் இது யானைக்கால் நோய் என்று.
ஆனால் ஒரு துரதிர்ஷ்டம்...இன்று வரை இப்படி வீங்கி நாறி அழுகும் நிலையில் உள்ள யானைக்காலை குணப்படுத்த சரியான வைத்திய முறைகளை மக்கள் அணுகாமல், கடைசி கட்டத்தில் நோயாளியின் உயிரை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட காலை முழுவதுமாக உடலிலிருந்து வெட்டி எடுப்பார்கள். இது தான் முடிவாகவும் இருந்து வருகின்றது.
No comments:
Post a Comment