Tuesday, June 24, 2014

ஒரே மனதும், அதன் குணங்களும்


மனம் மூன்று குணங்களை கொண்டுள்ளது, 

இது நமது எண்ணங்களின் தொகுப்பினால் இவ்வாறு குணங்களை கொண்டு செயல்பாட்டிற்க்கு வருகின்றது. இந்த குணங்களை வைத்தே மனிதனின் அனைத்து செயல்முறைகளும் காணப்படுகின்றன.

1.ஸத்துவ குணம், 2.ரஜோ குணம், 3. தாமஸ குணம்
என மூன்று குணங்களுக்கு ஏற்ப நடைமுறையில் மனித வாழ்க்கை அமைந்துள்ளது.

ஸத்துவ குணம் என்பது மனதில் சாந்தமும், ஆனந்தமும் கொண்டது. எந்த ஒரு நிலையிலும் மனம் பதட்டம் இல்லாத, அமைதியான முடிவுகளையும், சுக துக்கங்களை கடந்த சும்மா இருக்கும் நிலையைத் தரக்கூடியது. இந்த நிலையில்தான் ஞானிகளும், யோகிகளும் வாழ்கின்றனர். இதுவே சந்தோஷமான மனம்.

ரஜோ குணம் என்பது ஓய்வற்ற நிலையில் சதா பொருள்தேடி ஓடவும், நண்பர்களுடன் எப்பொழுதும் அரட்டை அடிக்கும் நிலையிலும்,தொலைக்காட்சி, சினிமா, விளையாட்டு போன்ற பொழுதுபோக்கும் செயல்களிலும், தொழில் சம்பந்தமான சிந்தனையிலும், அவனை சும்மா உட்காரவிடாமல் எப்பொழுதுமே உழைக்கத் தூண்டியவாறு இருக்கும். எப்பொழுதுமே சம்சார சாகரத்தில் மூழ்கி இருக்கும் துயரமான மனம்.

தாமஸ குணம் என்பது எப்பொழுதுமே சோம்பல், கோபம், தூக்கமயம், எதிலும் அக்கரை இல்லாமை, எல்லாரையும் குறைகூறுதல், எதற்கெடுத்தாலும் சந்தேகம், எதிலும் எச்சரிக்கை உணர்வு இல்லாத மந்தமான மனம்.

மனதை 3 வழிகளில் கையாளமுடியும்
------------------------------------------------------------------

1. மனதிலிருந்து விடுதலை (அதாவது ஜீவன் முக்தி)
2. மனதை மாற்றி அமைப்பது
3. மனதினுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்வது.

இந்த மூன்றும் மனிதன் மனதினை பற்றி அறிய உதவும்.

மனதிலிருந்து விடுதலை என்பது நமது எண்ணங்களை நிறுத்துவதோ, எண்ணங்களற்ற நிலைக்கோ செல்வது. பொதுவாக எண்ணங்கள் எதுவுமே தோன்றாமல் இருந்தால், சாதாரண மனிதனுக்கு அது கோமா நிலை எனலாம், அந்த நிலையில் எந்த எண்ணங்களும் அற்று நம்மை சுற்றி என்ன நடக்கின்றது என்பது கூட தெரியாத நிலை. 

அதாவது ஆரோக்கியமான மனதிலிருந்து விடுதலை வேண்டும் என்றால், குணங்களிலிருந்து (நல்ல குணம் மற்றும் கெட்ட குணம்) விடுதலை பெறவேண்டும். இது சமாதி நிலையில் மட்டுமே சாத்தியம். இதனை யோகிகளும், ஞானிகளும் அடைந்துள்ளனர்.

மனதை மாற்றி அமைப்பது என்பது மனதையே மாற்றுவது என்பதல்ல, அது சாத்தியமும் இல்லை, ஆனால் மனதிற்குள் மாற்றம் கொண்டுவருவது என்பது சாத்தியம்.

மனம் என்பதுடன் நாம் நட்பு வைத்துக்கொள்வது இயலும், எவ்வாறு என்றால் நாம் நமது உள் மனதின் எண்ணங்களை ஆராய்ந்து, அதனை பரிசீலித்து இது தவறு, இது சரி என்பதனை மனதுடன் பேசி புரிய வைத்தால், அந்த மனமானது நாளடைவில் நமக்கு நண்பனாக மாறிவிடும். பிறகு நமக்கு தேவையான போது மட்டுமே எண்ணங்கள் உதயமாகும், இதுவும் யோகிகளும், ஞானிகளும் தங்களது சமாதி நிலையிலிருந்து வெளிவரும் போது மற்றவர்களை பார்த்து பேச வேண்டிய நேரத்தில் எண்ணங்களை செயல்படுத்துகின்றனர்.

பொதுவாக மனிதர்கள் எல்லோருக்கும் இருப்பது ஒரே மனசுதான். 

இதுதான் உண்மையும் கூட, ஆனால் நமக்குத்தான் அது தெரிவதில்லை, எப்படியெனில், குழந்தை பென்சிலை தொலைத்துவிட்டு அழுவதும், நாம் பணத்தை தொலைத்துவிட்டு அழுவதும் ஒன்றுதானே. 

இங்கு குழந்தை மனசுக்கு பென்சில் பெரியது, நமது மனசுக்கு பணம் பெரியது. ஆனால் மனசு என்பது இருவருக்கும் ஒன்றுதான். 

ஆனந்தமும் அப்படியே குழந்தைக்கு பொம்மை கிடைத்தால் ஆனந்தம், பெரியவர்களுக்கு பணம் கிடைத்தால் ஆனந்தம். 

இதுவே தலைகீழாக பெரியவர்களுக்கு பொம்மையும், குழந்தைக்கு பணமும் கிடைத்தால் அங்கு சந்தோசம் வருவதற்க்கு பதிலாக துக்கம் மட்டுமே வரும். இதில் துக்கத்திற்கும், ஆனந்தத்திற்க்கும் அந்த ஒரே மனதுதான் காரணம், பிரச்சனை மனதினிடம் இல்லை, நம் குணாதியங்களிடம்தான் உள்ளது. இது புரிகின்றதா? 

ஆகவே மனமும் ஒன்றுதான், நாம் அனைவரும் ஒன்றுதான், இறைவனும் ஒன்றுதான், நாமும் இறைவனும் ஒன்றுதான் இதுவே சத்தியம்.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...