Tuesday, June 24, 2014

மன நோய்களில் சிக்கும் அறியாமை மனிதர்கள் !!!!


''வரும் காலத்தில் மனித குலத்தைப் பெரும்பாலும் ஆட்கொள்ளப்போவது மன நோயே” என்றால் அது மிகையாகாது. 

காரணம், அதிகரித்துவரும் பணி நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல் போன்றவைகளால் மன அழுத்தம் அதிகரித்து மன நோய்களில் சிக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அபரிதமாக அதிகரித்துவருகிறது. 

இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்று. அதனால், மன நோய்களை எதிர்த்து மனிதகுலம் போராடும் நிலையில் இருக்கிறது.

மனித மூளையில் ஒரு நியூரான் செல்லுக்கும் மற்றொரு நியூரான் செல்லுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடக்கும்போது டோப்பமின், செரோடோனின் ஆகிய வேதிப்பொருட்கள் சீராக சுரக்க வேண்டும். குறைவாகவோ, அதிகமாகவோ சுரக்கும்போது மன நோய் ஏற்படுகிறது. 

இந்த மன நோய்களில் பல வகைகள் உண்டு. மனச் சிதைவு, மனச் சோர்வு, மன எழுச்சி, எண்ணச் சுழற்சி உட்பட இன்னும் மனம் சார்ந்த நிறைய நோய்கள் இருக்கின்றன. 

இதில் கொடூரமானது 

மனச் சிதைவு நோய்.
------------------------------------- 

இந்த நோய் வந்துவிட்டால் தானாகவே பேசிக்கொள்வதும், தானாகவே சிரித்துக்கொள்வதும், திடீர் என அலறி கத்துவதும், ஆடைகள் இல்லாமல் ஓடுவதும், தற்கொலைக்கு முயற்சிப்பதும், வன்முறையில் ஈடுபடும் எண்ணத் தூண்டலுமாக இருப்பார்கள். 

இந்த நோய், நோயாளிகளுக்கும் ஆபத்து, நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கும் ஆபத்து. இது மன நோயின் உச்சக் கட்டம்.

அடுத்து,

மனச் சோர்வு நோய்.
-----------------------------------


இது செரோடோனின் குறைவினால் ஏற்படுகிறது. இந்த நோய் உள்ளவர்கள் 'நான் பிறந்ததே வேஸ்ட். யாருக்கும் உபயோகம் இல்லாமல் இருக்கிறேன். நான் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறேன். வாழ்வதைக் காட்டிலும் செத்துப்போவதே மேல்’ என்று தனக்குள் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் நோய் முற்றி தற்கொலை செய்துகொள்வார்கள்.

மன எழுச்சி நோய்.
--------------------------------


இது டோப்பமின் ஏற்றத் தாழ்வால் ஏற்படுகிறது. இந்த நோய் வந்தவர்கள் தங்களைக் கடவுளாகவோ, பிரதமராகவோ, முதல்வராகவோ, அல்லது தாங்கள் விரும்பும் ஹீரோவாகவே நினைத்துக்கொண்டு, அவர்களைப்போலவே செயல்படத் தொடங்குவார்கள். 

நாளடைவில் இவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டு ஆடைகளே இல்லாமல் அலைந்துகொண்டு இருப்பார்கள்.

எண்ணச் சுழற்சி நோய்.
----------------------------------------


இந்த நோய் வந்துவிட்டால் ஒரு வேலையைத் திரும்பத் திரும்ப செய்யத் தூண்டும். வீட்டின் கதவை பூட்டுப் போட்டுவிட்டு சற்று நேரத்தில் மீண்டும் சந்தேகத்தோடு வந்து இழுத்துப் பார்ப்பது, கைகளைத் திரும்பத் திரும்பக் கழுவுவது, பிறரை மட்டும் அல்லாமல் தன்னைத்தானே சந்தேகப்படுவது என்று இவர்கள் செயல்படுவார்கள்.

மேற்கண்ட நடவடிக்கைகளை வைத்து ஒருவரை மன நோயாளி என தீர்மானிக்க முடியும்.

இப்பொழுது மன அமைதியின்மையின் காரணமாக மனம் சார்ந்த நோய்களும், உடல் சார்ந்த நோய்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

உலக சுகாதார நிறுவனம் மன அமைதியின்மையின் காரணமாக 12.5 சதவிகித மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது.

மன அமைதியின்மை உருவாகி மருந்துகள் சாப்பிடுவதற்கு முன் சில எளிய வழிகள் மூலம் நம்மை தற்காத்துக் கொள்ளமுடியும்.

மன அமைதியின்மைக்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது. போதுமான ஓய்வு இன்மை, பிரச்சனைகள், பிரச்சனைகளால் ஏற்படும் மன அழுத்தம், அதிக உழைப்பு, பொருளாதார தேவைகளின் குறைவு, வேலைகளில் உள்ள பிரச்சனைகள், உடல் நலக் குறைவு, தைராயீடு, ஆஸ்துமா, போன்ற சில நோய்களுக்கு உபயோகப்படுத்தப்படும் மருந்துகள், போதைப் பொருள்கள் உபயோகிக்கும் பொழுது சிறிது மன அழுத்தத்தை குறைத்தாலும் பின்னர் மன அழுத்தத்தை அதிகமாக்கும். 

குடும்ப வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள், போட்டி, பொறாமை, மன அழுத்தத்தை அதிகரிக்க வைக்கிறது.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட வாழ்க்கை வழிமுறையில் மாற்றங்கள் தேவை. நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ணவேண்டும். அத்துடன் போதுமான தூக்கம், மற்றும் உடற்பயிற்சி, தியானம் செய்யவேண்டும். 

உடல் சார்ந்த நோய்கள்
-----------------------------------------


ஆயினும் பல உடல் சார்ந்த நோய்கள் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக,

ஒவ்வாமைகள், ஆஸ்த்மா இருதய நோய்கள், மூட்டு வலிகள், உடல் வலிகள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய்கள், உடற் களைப்பு,
அதீதமாக உண்ணலும் எடை அதிகரித்தலும் போன்றவைகள் மன ரீதியான பிரச்சனைகளை அதிகப்படுத்தும் நோய்களாகும். 

போதைப் பொருள்களை முற்றிலும் நீக்கவேண்டும். யோகா, தியானம் ஆகியவைகள் மன அழுத்தத்திற்கு நல்ல வழிமுறையாகும். மன அழுத்தத்தால் இருதயம் அதிகம் துடித்து இரத்த அழுத்தத்தையும், இரத்தத்தில் கொழுப்புச் சத்தையும் உருவாக்குகிறது. 

மன அழுத்தம் காட்றிசோன் என்ற வேதியல் பொருளை உருவாக்கி தசை இறுக்கத்தை அதிகரித்து சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பை உருவாக்குகிறது. 

மன அழுத்தம், பசியின்மை, சோர்வு, தலைவலி, எரிச்சல், மயக்கம், நரம்புத் தளர்வு, ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை, தூக்கமின்மை, வாயு, அஜீரணம், குடல்புண், வயிறு சரியின்மை, பதட்டம், பீதி மற்றும் மாரடைப்பு போன்றவைகளை உருவாக்கும்.

கோபம், ஆணவம், மாயை, பேராசை, பொறாமை, வெறுப்பு, ஆகிய உணர்வு சார்ந்த எதிர்மறை எண்ணங்களால் மன அமைதி குறைகிறது. 

இவைகள் சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், பாரம்பரிய குண நலன்களாலும் உருவாக்கப்படுபவை ஆகும். இவற்றை நாம் பயிற்சியின் மூலமாக சரி செய்ய முடியும்.

2 comments:

  1. ''வரும் காலத்தில் மனித குலத்தைப் பெரும்பாலும் ஆட்கொள்ளப்போவது மன நோயே”

    ReplyDelete
  2. பதிர்வு மிக அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...