வெகுகாலமாக சித்தர்களில் தொடங்கி இன்றைய நானோ தொழில்நுட்பம் வரை மனிதனுக்கு ஒரு தீராத தாகம் இருக்கிறது அது 120 வருடம் வாழ்வது எப்படி? என்ற தாகம்தான்!
அதற்காகத்தான் ஒரு பக்கம் ஆன்மீகம் , யோகாசனம் என்ற பெயரில் பலரும் முயற்சி செய்கிறார்கள், இதற்கு மருத்துவரீதியாக எங்கேயாவது தீர்வு இருக்கிறதா? எனறு ஒரு டீம் "ஸ்டெம் செல்" ஆராய்ச்சி போன்றவற்றிலெல்லாம் ஈடுபட்டுள்ளது.
ஸ்டெம் செல் ஆராய்ச்சி என்பது பெண்ணின் கருமுட்டையில் உள்ள உட்கருவை நீக்கிவிட்டு ஆணின் விந்தணுச் செல்லின் உட்கருவுடன் இணைத்து புதிய கரு உண்டாக்கப்படுகிறது 8 , 9 வாரங்களில் “எம்பிரியோ” எனப்படும் வளர்ச்சி நிலை உருவானதும் நமக்கு தேவையான மரபணுச்செல்களை பிரித்து அதன் வளர்ச்சிப்பாதையை மாற்றி நமக்கு தேவையான சிறுநீரகமோ, இதயமோ , கல்லீரலோ செய்து கொள்ளலாம்.
ஸ்டெம் செல் ஆராய்ச்சி மூலம் சிறுநீரகமோ, இதயமோ , கல்லீரலோ புத்தம் புதிதாய் தயாரித்து மனிதனுக்கு பொருத்தினால் அவன் ஆரோக்கியமுடையவன் ஆகிறான்.
இதே ரீதியில் கண்கள், மூக்கு, காது , நுரையீரல் என மாற்றிக்கொண்டே போனால் மனிதனின் வாழ் நாள் நீண்டுகொண்டே போகும் .மனிதனின் உடல் உறுப்புகள் புதிதாகும் போது மனிதனும் புதியவனாகிறான்.
இந்த முறைக்கு “மறு அமைப்பு சித்தாந்தம்”(Reset Theory) என்று பெயர் ஆகவே மனிதன் மரணத்தை வென்று சாகவரம் பெற சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
இத்தகைய ஆராய்ச்சிகள் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சோமோர் பென்சர் ஆராய்ச்சி கூடத்தில் மிக மிக ரகசியமாக நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
மேலும் உலகின் வேறு பகுதிகளிலும் நடைபெற்று கொண்டு இருக்கின்றது . இது வருங்காலத்தையே மாற்றக்கூடிய ஆராய்சியாக இருப்பதால் ஆதரவும் ,எதிர்ப்பும் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் மனிதனின் தோல் செல்லுடன் பெண்ணின் சினைமுட்டையை சேர்த்து ஸ்டெம்செல் கருமுட்டையை உருவாக்கி அபார சாதனை படைத்துள்ளதை பெருமையாக உரத்தக் குரலில் தெரிவித்துள்ளார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.
இதன் மூலம் சிக்கலான ஆபரேஷன்களுக்கு தேவையான ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர். மேலும் பலரும் எதிர்பார்த்த படி குளோனிங் முறையில் மனிதனை ஜெராக்ஸ் எடுக்கும் முயற்சியின் முதல்கட்டம் இது என்ற பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது இந்த ஆராய்ச்சி.
மனித உடலில் பல லட்சம் கோடி செல்கள் உள்ளன. இவற்றையோ, நுண்ணுயிர்களையோ மணம், நிறம், குணம் மாறாமல் அச்சு அசலாக ஜெராக்ஸ் பிரதி எடுப்பதுதான் ‘குளோனிங்’.
இது இரண்டே வரி விளக்கம் என்றாலும் இது மிகவும் சிக்கலானது. இதுதொடர்பான ஆராய்ச்சிகள் பல காலமாக நடந்து வந்தது. 1952 - ல் முதன்முதலாக தவளை ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது.
1963-ல் மீன், 1986-ல் சுண்டெலி.. என்று பட்டியல் நீண்டது. பெண் செம்மறி ஆட்டின் பால் மடியில் இருந்து செல்லை எடுத்து அதில் இன்னொரு பெண் ஆட்டின் முட்டையை சேர்த்து கருமுட்டையாக மாற்றி இதை வேறொரு செம்மறி ஆட்டின் கருப்பையில் வைத்து.. இப்படி 3 பெண் ஆடுகளின் குட்டியாக 1996 - ல் ‘டாலி’ ஆடு பிறந்தது குளோனிங் ஆராய்ச்சியில் பெரும் மைல் கல் சாதனையாக இது கருதப்பட்டது.
இது போன்று நாமாக உயிர்களை உருவாக்குவது இயற்கைக்கு எதிரான செயல் என ஒரு பக்கம் கண்டன குரல்கள் எழுந்தாலும் பூனை, குதிரை, நாய், ஓநாய், ஒட்டகம், ஆடு என பல்வேறு விலங்குகள் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுதான் வந்தன.
கூடவே மனித செல்லையும் குளோனிங் முறையில் உருவாக்குவதற்கான ஆராய்ச்சியும் தீவிரமாக நடந்து வந்தது. அப்படி நடந்த 15 ஆண்டு தீவிர ஆராய்சிக்கு பிறகு இதில் தற்போது வெற்றி கண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் ஆரிகன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
ஒரு ஆணின் தோல் செல்லை எடுத்து, அதனுடன் பெண்ணின் சினை முட்டையை சேர்த்து ஸ்டெம்செல் கருமுட்டையாக மாற்றியிருக்கிறார்கள்.
இது அச்சு அசலாக ஆண் தோல் செல்லின் ஜெராக்ஸ் போல அமைந்துள்ளது. இது பற்றி ஆய்வுக்குழு உறுப்பினர் டாக்டர் சுக்ரத் மிடாலிபோவ்,” மனிதனின் தோல் செல்லை குளோனிங் முறையில் உருவாக்கும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதுபோல குளோனிங் முறையில் உருவாக்கப்படும் கருமுட்டையில் இருந்து ஸ்டெம்செல் உருவாக்கி அதன் மூலம் பல்வேறு வகையான திசு செல்களை உருவாக்க முடியும். உறுப்பு மாற்று ஆபரேஷன்களுக்கு இது முக்கிய பங்களிக்கும். உறுப்பு செல்களை வளர வைத்து, செயற்கை உறுப்புகள் தயாரிப்பது, தேவைப்படுவோருக்கு பொருத்துவதற்கான முயற்சிகளும் வெற்றி பெறும்.
குளோனிங் முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் மனித ஸ்டெம்செல்லுக்கு வேறு செல்கள், திசுக்கள், உறுப்புகளை வளர வைக்கிற திறன் இருப்பது உறுதியாக தெரிகிறது.
பார்வை கோளாறுகள், தண்டு வட பாதிப்புகள், பார்கின்சன்ஸ் டிசீஸ் எனப்படும் மூளை முடக்குவாதம், நரம்பு மண்டல பாதிப்புகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் செல்லை எடுத்து அதை கருமுட்டையாக மாற்றி வளர வைத்தால் செல்களின் ஜெராக்ஸ் பிரதிகளை உருவாக்க முடியும்.
பாதிக்கப்பட்ட செல்களை அகற்றிவிட்டு இந்த புதிய செல்களை பொருத்துவதன்மூலம் அவர்களை குணமாக்க முடியும். அதே நேரம், இந்த குளோனிங் ஸ்டெம் செல்லுக்கு இனப் பெருக்க குணம் இருக்கிறதா? என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. அதில் நாங்கள் ஆர்வமும் காட்டவில்லை.” இவ்வாறு மிடாலிபோவ் கூறினார்.
இது குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைகழகத்தின் ஸ்டெம்செல் துறை பேராசிரியர் மார்ட்டின் பெரா கூறுகையில், ‘‘ஆரிகன் விஞ்ஞானிகளின் அபார சாதனையானது மரபணு வளர்ச்சியில் மைல்கல் போன்றது.
ஸ்டெம்செல்களின் மூலம் பலவித நோய்களை குணப்படுத்த முடியும் என்பது விரைவில் நிரூபிக்கப்படும். ஆரோக்கியமான மனிதகுலத்தை உருவாக்கி நாம் சாதனை படைப்பதால், ஸ்டெம்செல் மற்றும் குளோனிங் சம்பந்தமான எதிர்ப்புகள் தானே மறையும்’’ என்றார். மனித செல்லை குளோனிங் முறையில் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
மனிதன் மரணத்தை வெல்ல பார்க்கிறானா? அல்லது மனித குலத்தையே அழிக்கப்பார்க்கிறானா? என்பதற்கு இயற்கைதான் தீர்ப்பு சொல்லும்.
No comments:
Post a Comment