இறுக்கமான சூழலில் இன்று உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. எல்லாத் துறையிலும் எல்லா விதமான வேலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75% முதல் 90% வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.
பெண்களுக்குத்தான் ஆண்களை விட மன அழுத்தம் இன்றைய கால கட்டத்தில் அதிகம் தென்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அவர்கள் செய்யும் வேலை, கணவர், குழந்தைகள், பணவரவு செலவு, சூழ்நிலை மற்றும் குடும்ப எதிர்காலம் ஆகியவற்றால் பெண்களுக்கு மன உளைச்சல் ஆண்களைவிட அதிகம் இருப்பதாக தெரிகிறது.
சக மனிதர்கள் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.
மன உளைச்சல் சில சமயங்களில் நாம் அறியாமலேயே நம்மேல் திணிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு வேலையை இழத்தல் அல்லது நோய் வாய்ப்படுதல் முதலியன, சில விஷயங்களை நாம் அறிந்தே துன்புறுகிறோம்.
உதாரணத்திற்கு, நாம் செய்யும் வியாபாரம் நஷ்டம் ஏற்படும் போது இன்னும் சிறிது காலம் செய்து பார்க்கலாம் என்று நினைத்து கடன் வாங்கியும் வியாபாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியாமல் கடனாளியானவர்கள் ஏராளம்.
மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர்.
எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாக வும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள், எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாதவர்கள், அவர்கள் எதையும் ஆனந்தத்துடன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிகிறது.
ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும், கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவுப் பழக்கம் சீரான வகையில் வைத்துக்கொள்ளுதல். உடற்பயிற்சி, வேண்டிய அளவு உறக்கம் ஆகியவை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மன அழுத்தம் ஏற்படாமலும் நோய் வராமல் தடுப்பதற்கும் மிக அவசியமாகும்.
மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை.
எல்லா நடைபாதைகளையும் மலர்களால் அல்லது மெத்தைகளால் அலங்கரிப்பது இயலாது என்பதால் செருப்பு அணிகிறோம். அது போலவே மன அழுத்தத்தை உண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும்.
மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம்முடைய மனதின் சிந்தனைகளை தூய்மைப் படுத்தவேண்டும். எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தையே அளிக்கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள முடியும்.
மேலும் சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும்.
மனவலிமை குன்ற காரணங்கள் :
அதிகமாகவும் கட்டுப்பாடில்லாமலும் தொலைக்காட்சியை பார்ப்பது
தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் பத்திரிக்கைகள் அதிகமாக பார்ப்பது, கேட்பது, படிப்பது.
குறை கூறுபவரிடையே, வேலை அதிகம் வாங்குபவர்களிடையே மற்றும் வீட்டிலும் அதே நிலை.
தன்னைத்தானே குறைக்கூறிக் கொள்வது
அதிக கவலை
பிடிக்காத சூழ்நிலையில் வாழ்க்கை
பணப்பிரச்சனை மற்றும் ஊதாரித்தனம்.
கொடுத்த வேலையை முடிக்காமலிருத்தல்
சண்டை. சச்சரவுகளை தீர்க்காமலிருப்பது.
உடல் வலிமை காரணங்கள்
சிகரெட் குடித்தல்
மது அருந்துதல்
கஞ்சா, அபின் உபயோகம்
சத்தில்லாத உணவு
சர்க்கரை வியாதி
அதிக காபி, டீ.
உடற்பயிற்சி செய்யாமலிருத்தல்.
உடல் பருமன்
போதிய உறக்கம் இல்லாமலிருத்தல்
எப்போதும் படபடப்பு, அவசர செயல்கள்.
மன அழுத்தம் தொடர்பான சில நோய்கள் :
வயிற்று நோய்கள்
போதைக்கு அடிமையாதல்
ஆஸ்த்துமா
களைப்பு
படபடப்பு, தலைவலி
இரத்த அழுத்தம்
தூக்கமின்மை
வயிற்று, ஜீரண கோளாறுகள்
இருதய நோய்கள்
மனநிலை பாதிப்பு
உடலுறவில் செயல்பட இயலாமை
சொரியாசிஸ், படை, அரிப்பு, உணர்ச்சியற்ற தோல் போன்ற தோல் வியாதிகள்.
மனஅழுத்தமும், அதனால் வரும் நோய்களைப் பற்றிய முழு புரிதலும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஒரு நபரின் மன அழுத்த நிலையை, அட்ரீனல் சுரப்பி சுரக்கும் இரண்டு இரசாயனங்களான கார்டிசால் (cortisol) மற்றும் DHEA (dehydroepiandrosterone) ஆகியவற்றை அளப்பதன் மூலம் அறியலாம்.
மன உளைச்சல் காரணமாக உண்டாகும் உடலிலும் உள்ளத்திலும் உண்டாகும் மாற்றங்கள் 4 வகையானவைகள்.
* மனம் சார்ந்தவை – பரபரப்பு , கவலை , சோர்வு , கோபம் , எரிச்சல் , ஏமாற்றம் , ஆர்வமின்மை ,வெறுப்பு
* நடத்தை சார்ந்தவை – தவறுகள் செய்வது , விபத்துகள் , உண்பது தூங்குவதில் பிரச்னை , புகைத்தல் , போதை மருந்துகள் பயன்படுத்தல் , மதுவுக்கு அடிமையாதல் , சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழ்தல் அல்லது ஆவேசமாக குழப்பங்கள் உண்டு பண்ணுதல்.
* எண்ணம் சார்ந்தவை – கவனக் குறைவு , ஞாபக மறதி , ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை , பிரச்னையை எதிர்கொள்ள முடியாத நிலை , தவறை சுட்டிக் கட்டினால் அது பற்றி அக்கறை கொள்ளாதது.
* உடல் சார்ந்தவை – அதிக வியர்த்தல் , தலை சுற்றுதல் , குமட்டல் , மூச்சு வாங்குதல் , உடல் வலி , அடிக்கடி நோய்த் தொற்று , ஆஸ்த்மா , தோல் பிரச்னைகள் , இருதய பிரச்னை.
இத்தகைய மன உளைச்சல் அறிகுறிகளுக்கு நிவாரணமாக சூழ்நிலைக்கேட்ப செயல்படும் நிலை ( Adaptation ) தற்காப்பு முறையில் உருவாகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் :
* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.
* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.
* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.
* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
* காபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.
* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை.
* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விட்டு. எந்த தொந்தரவும் இன்றி ஓய்வு எடுங்கள்.
* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் "மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது' என்று சொல்லப் பழகுங்கள்.
* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
* எளிமையாக வாழுங்கள்.
* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.
நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.
* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.
* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.
* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.
* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.
* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.
* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.
* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.
* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.
* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.
மன உளைச்சலை எதிர்கொள்வது முழுக்க முழுக்க நம்மிடமே உள்ளது. வெளியிலிருந்து உண்டாகும் பிரச்னைகளை சுமுகமாக எதிர்கொண்டு அவற்றை மாற்ற முடியாத பட்சத்த்தில் நம்மை நாமே மாற்றிக்கொண்டால் நாம் அதை எதிர் கொண்டு வெற்றி பெறுகிறோம்.
இதற்கு சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்தல் தோல்வி எண்ணங்களை விடுதல் , தன்னம்பிக்கை போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகள் மூலம் பயன் பெறலாம்..
No comments:
Post a Comment