Sunday, March 8, 2015

செல்லும் அதன் செயல்பாடும்



செல் என்பது என்ன? 

ஒரு செல்லுக்குள் என்ன நடைபெறுகின்றது. அதன் உள் உருப்புகள் என்னென்ன? என்பதனை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். சாதாரணமாக நம்மால் உருவாக்கபடும் ஒரு இயந்திரம் பழுது ஏற்பட்டால், அதனை சரி செய்ய வேண்டுமெனில் அதற்குள் என்னென்ன உதிரிபாகங்கள் உள்ளன, அது எங்கெங்கு பொருத்தப்பட்டுள்ளது, அது எப்படி இருக்கும்? அது எப்படி வேலை செய்யும் என்று நன்கு தெரிந்தால்தான் அந்த பகுதியை தனியா கழற்றி, அதை சரி செய்ய முடியும்.

 
அது நாம் நம் கையால் உருவாக்கின இயந்திரம். ஆனால், நம்முடைய செல் இயற்கையாக உருவானது. அதனுள் என்ன என்ன இருக்கின்றது? அது எப்படி வேலைகளை செய்யும்? எதுவும் நமக்கு தெரியாது. இயந்திரம் போன்று, நம்முடைய உடலில் உள்ள செல்களில் ஏதாவது பிரச்சனை என்றால், அதாவது ஏதாவது ஒரு நோய் வந்தால், அதை சரி செய்ய நம்மால் அந்த பகுதியை மட்டும் தனியாக எடுத்தெல்லாம் சரி செய்ய முடியாது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், கையில் ஒரு பிரச்சனை என்றால், கைக்கு மட்டும் தனியாக நம்மால் மருந்து கொடுக்க முடியாது.

பொதுவாக நாம் மருத்துகளை உடலில் ஊசி மூலமாவோ, அல்லது மாத்திரைகளாகவோ தான் எடுத்துக்கொள்வோம். அது நம்முடைய இரத்தம் மூலமாக, பாதிக்கப்பட்ட கைக்கு மட்டும் இல்லாமல், நம்முடைய உடல் முழுவதும் பரவும். அப்படி பரவும் போது, உடல் முழுக்க இருக்கிற மற்ற நல்ல நிலையில் இருக்கின்ற செல்களுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது. ஆகவே, ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படும் போது இதெல்லாம் கவனமாக பரிசோதிக்கப்படும். இதையெல்லாம் பரிசோதிக்கப்பட வேண்டுமென்றால், நமக்கு செல்கள், அதனுடைய அமைப்பு, அதன் வேலை என்று எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிருந்தால் தான் நம்மால் நல்ல மருந்துகளை கண்டுபிடிக்க முடியும்.

ஆனால், துரதிஷ்டவசமாக, மனிதன் இந்த விசயத்தில் பாதி கிணறுதான் தாண்டியிருக்கான். இன்னும் ஒரு செல்லுக்குள் தெரிந்துகொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கின்றது. அதனால்தான் நிறைய நோய்களுக்கு இன்னும் நம்மால் சரியான சிகிச்சை முறை கண்டுபிடிக்க முடியவில்லை.

நம்முடைய உடல் போன்றே செல்லும் அதனுடைய சொந்த  உறுப்புகளை கொண்டிருக்கு, அதாவது நம்முடைய உடல் மாதிரியே, செல்லும் ஒவ்வொரு வேலைக்கும் தனி தனி உறுப்புகளை வைத்திருக்கின்றது. முதலில் செல்லுக்கு என்ன என்ன வேலை என்று பார்ப்போம். 

1 . தன்னை உயிரோட வைத்துக்கொள்ளணும். அதுக்கு தேவையான சக்தியை நாம் சாப்பிடுகின்ற உணவில் இருந்து தயார் செய்ய வேண்டும். 
2 . தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்ய வேண்டும்.
3. அந்த வேலையை செய்ய தேவையான இயந்திரங்கள் அல்லது தொழிலாளர்கள் அதாவது புரோட்டீன்களை உருவாக்கவேண்டும்.
4 . அந்த வேலை சரியாக செய்யப்படுகிறதா என்று கண்காணிக்கவேண்டும். வேலை முடிந்ததும் அந்த புரோட்டீகளை அழிக்கவேண்டும்.
5 . முக்கியமாக தன்னுடைய எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அதாவது தன்னை தாக்க வரும் நோய் கிருமிகளிடமிருந்து, அப்படி ஒரு வேலை நோய் தாக்கிட்டா, அந்த கிருமிகள் அழிக்கப்படவேண்டும்.
6 . இனப்பெருக்கம், அதாவது வயதாகியோ அல்லது நோய் தாக்கியோ அல்லது விபத்து மூலமாகவோ இறந்து போன செல்களுக்கு மாற்று செல்களை உருவாக்கவேண்டும். 

இதுபோன்று ஒரு செல்லுக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றது. இருந்தாலும் இவை தான் முதன்மையானவை. இத்தனை செயல்களும் தடையில்லாமல் நடந்தால் தான் ஒரு செல் ஆரோக்கியமாக இருக்கின்றது என்று அர்த்தம்.   இதில் எந்த இடத்தில் ஒரு பிரச்சனை வந்தாலும் மற்ற எல்லா வேலையும் சேர்த்து பாதிக்கப்படும்.

செல் ஆரோக்கியமா இருக்கவேண்டும் என்றால், அதற்கு தேவையான சக்தி, அதாவது தன்னோட உயிரை காப்பாத்திக்கவும், தனக்கு அளிக்கப்பட்ட வேலைகளை செய்யவும் தேவையான சக்தியை ஒவ்வொரு செல்லும் தானே தயார் செய்துகொள்ளும். நம்முடைய உடலுக்கு தேவையான மொத்த சக்தியையும் தருவது சர்க்கரை. அதாவது carbohydrates. அதிலும்  முதன்மையாக இருப்பது  குளுகோஸ்.

ஒரு செல் தனக்கு தேவையான சக்தியை தயாரிக்க பெருமளவு குளுகோஸை தான் பயன்படுத்துகிறது. குளுக்கோஸ் கிடைக்கவில்லை என்ற நிலையில்தான் மற்ற அதாவது லிபிட்ஸ் அல்லது புரோட்டீன்கள் பயன்படுத்தப்படும்.

இந்த சக்தி தயாரிக்கின்ற வேலை ஒரு பெரிய செயல்முறை. நாம் சாப்பிடுகின்ற சாப்பாடு கிட்டத்தட்ட சுமாராக ஒரு இருபது விதமான வேதி வினைகளுக்கு உட்படுத்தப்பட்டு கடைசியாகத்தான் நமக்கு தேவையான சக்தி அதில் இருந்து கிடைக்கின்றது. இது நம்முடைய உடலில், கல்லீரலில்  (liver ) நடக்கும்.

மேலே சொல்லப்பட்டுள்ள வேலைகளை செய்ய நம்முடைய செல் தனித்தனியாக தனக்கு மட்டுமே சொந்தமான உறுப்புகளை வைத்திருக்கின்றது. மனிதன், மிருகம் என்று வேறு வேறாக இருந்தாலும் உடலுக்கு ரெண்டு கை, ரெண்டு கால், தலைன்னு அடிப்படை கட்டமைப்பு ஒன்றுதான், அது போலத்தான் செல்லுக்கும் உண்டு. தாவரம், விலங்கு, பாக்டீரியா என எல்லாவற்றிற்கும் ஒன்று தான். இருக்கின்ற இடத்திற்கு ஏற்றது போன்று செய்கின்ற வேலையிலும், அதனுடைய அமைப்பும்  சிறிது சிறிது வித்தியாசப்படலாம் இதுபோல செல்லைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் தற்பொழுது இது போதும்.



No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...